சர்வலோகத்துக்கும் படியளந்து காத்து நிற்கும் சர்வேஸ்வரன், இமயமலையிலிருந்து கிளம்பி தென் தமிழகப்பகுதிக்கு வந்தபோது முதன்முதலாக அவரது பாதம்பட்ட மலை பர்வதமலை. பல்வேறு அற்புதங்களையும் அதிசயங்களையும் உள்ளடக்கிய அந்த மலைக்கு தென்கயிலாயம் என்ற சிறப்பும் உண்டு.திருவண்ணாமலை மாவட்டம், தென்மாதிமங்கலம் பகுதியை ஒட்டியமைந்துள்ள இந்த பர்வத மலையில் ஈசன் ஸ்ரீபிரம்மராம்பிகை உடனுறை ஸ்ரீமல்லிகார்ஜுனராய் கோவில் கொண்டு, கோடானு கோடி உயிர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தரையிலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இவ்வாலயத்தைச் சென்றடைய கடப்பாரைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படி என பலதரப்பட்ட படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். சாதாரண லோகாயதப் பொருளையே சிரமமின்றி அடைய முடியாது எனும்போது, பரம்பொருளான ஈசனை அடைவது அத்தனை எளிதான ஒன்றல்ல என்பதை பக்தனுக்கு உணர்த்தும் நோக்கில்தான் ஆலயம் மலையுச்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான இந்த மலையில் ஏறுவது எப்படி என்று மலைத்து நிற்பதற்கு பதில், ஈசனை இதயமுருக நினைத்து அடியெடுத்து வைத்தால் பயம் விலகியோடும் என்கிறார்கள் அனுபவமுள்ள பக்தர்கள். இந்த ஆலயம் இரண்டாயிரமாண்டு பழமையுடையது. இராவணனுக்கு எதிரான போரில் பிரம்மாஸ்திரத்தால் மயங்கிச் சரிந்த லட்சுமணனையும், ராம சேனையையும் காப்பாற்ற, இமயத்திலிருந்து அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிவந்தபோது, அதிலிருந்து வீழ்ந்த சிறு பகுதியே இந்த பர்வதமலை.
"சாது தரிசனம் பாபவிமோசனம்' என்றொரு மூதுரை உண்டு. பர்வத மலை சித்தர்கள் வாழும் மலை. இன்றும் இங்குள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் தேனீக்கள் வடிவில் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. சில பக்தர்களுக்கு சித்தர்கள் காட்சியளித்தும் இருக்கிறார்கள். தமிழிலக்கிய நூல்களில் ஒன்றான மலைபடுகடாமில், கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் கோலோச்சிய மன்னர்களில் ஒருவனான நன்னன், பர்வதமலை வந்து சிவனை தரிசித்துச் சென்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சிவபெருமான் எதிரே ஏற்றப்படும் கற்பூர ஜோதியில் நாகம், சூலம், உடுக்கை போன்றவற்றின் பிம்பங்கள் தெரிவதாக பக்தர்கள் பிரமிப்புடன் கூறுகின்றனர். வடஇந்தியாவில், பக்தர்களே இறைவனுக்கு பூஜை, அபிஷேகம் செய்து வழிபட அனுமதிக்கும் ஆலயங்கள் பலவுண்டு. அதுபோல பர்வதமலையிலும் பக்தர்கள் இறைவனுக்கு தாங்களே அபிஷேக, ஆராதனை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இறைவனை தரிசிக்கவும் ஸ்பரிசிக்கவும் வாய்ப்பு என்பது பெரும் பேறல்லவா!
பௌர்ணமி, அமாவாசை நாட்களில் நடைபெறும் சிறப்புப் பூஜையில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். "அடிக்கொரு லிங்கம்' என்ற பெருமையுடையது அருணாசலம் எனில் "பிடிக்கொரு லிங்கம்' எனும் பீடுடையது பர்வத மலை. இந்த பர்வத மலை மல்லிகார்ஜுனரிடம் மனமுருகி வேண்டுபவர்கள் மனக்கஷ்டம், செய்வினைத் தாக்கம், தொழில் மந்தம், கல்யாணத் தடை விலகி சுபிட்ச வாழ்வை அடைகின்றனர். இம்மலைக்கு ஐந்து, ஏழு அல்லது ஒன்பது முறை வந்து தீபம் ஏற்றி வணங்குபவர்களின் மலையளவு கஷ்டங்களும் பனிபோல் விலகும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை சென்று அங்கிருந்து ஃபோஸாகுப்பம் பேருந்தில் சென்றால் பர்வதமலை அமைந்துள்ள தென்மாதிமங்கலத்தை அடையலாம். புகைவண்டிப் பயணத்தை விரும்புபவர்கள். திருவண்ணாமலையிலிருந்து போரூர் வரை புகைவண்டியிலும் பின் அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் பேருந்திலோ இதர வாகனங் களிலோ பயணம் செய்தும் பர்வதமலையை தரிசிக்கலாம்.
முதல் முறை வரும்போது இரண்டு நாட்களுக்கு கால் வீங்கிவிடும். ஆனாலும் கொஞ்ச நாட்களிலேயே மீண்டும் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை காந்தம்போல ஈர்க்கும். அதுதான் பர்வதமலை மல்லிகார்ஜுனரின் ரகசியம்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக