புதன், 25 மார்ச், 2015

“கடல்” ஒரு பார்வை:

கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.
கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.
உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.
ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை.
வெப்பமண்டல பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர் ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம்.
அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில் மேல் கடல் 0 டிகிரி வெப்பநிலையிலும் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4 டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும்.
அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக அதிகம்.
நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும் பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு அடர்த்தி அதிகம்.
நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில் எளிதாய் மிதக்கலாம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே எட்டுவதில்லை.
மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.
இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல் போக்குவரத்து.
ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில் வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம்.
இந்தியாவின் 7600 கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000 மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன.
ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில் ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன.
இதன் பொருளாதார மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி ஈட்டுகிறது.
வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு ஏற்றுமதியாகின்றன.
சுறாத் துடுப்புகள்(shark fins)வளைகுடா நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.


கார்த்திகை தீபம் மற்றும் பலன்: திருவிளக்கு பூஜை விதிமுறை, தீப லட்சுமி துதி, விளக்கு பூஜை மாத பலன், எந்த திசை என்ன பலன், எந்த எண்ணெய்க்கு என்ன பலன்?

கார்த்திகை தீபம் மற்றும் பலன்:
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.
தீப லட்சுமி துதி:
1. தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே
ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன்.
2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே
எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் உன்னைத் துதிக்கிறேன்.
3. ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
எவரால் தினமும் தீபம் ஏற்றப்படுகிறதோ அவரது இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். சகல செல்வங்களும்சேரும்
4. கீடா: பதங்கா: மசகாச்  வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே  நிவஸந்து ஜீவா:
த்ருஷ்ட்வா ப்ரதீபம்   ஜன்ம பாஜோ
பவந்தி நித்யம் ஸ்வசாஹி விப்ரா:
நுண்ணுயிர்கள், புழுக்கள், கொசுக்கள், வண்டுகள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள் இவற்றோடு ஆகாயத்தில், பூமியில் நீரில் என எல்லா இடங்களிலும் உள்ள உயிர்கள் எவையானாலும் அவற்றின் எல்லா பாவங்களும் தீபஜோதியாகிய திருவிளக்கினை தரிசிப்பதால் நீங்கும். பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களையும் நீக்கக்கூடிய ஜோதிலட்சுமியை வணங்குகிறேன். பிரகாசமான வாழ்வினை அவள் எனக்கு அளிக்கட்டும்.
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது.
விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:
திருவிளக்கு பூஜை விதிமுறை:
விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.
* சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
*எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணைவிளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
விளக்கு பூஜை மாத பலன்:
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன் தரும்.
சித்திரை  தானிய வளம்.
வைகாசி  செல்வச்செழிப்பு.
ஆனி  திருமண பாக்கியம்.
ஆடி  ஆயுள்பலம்.
ஆவணி  கல்வித்தடை நீக்கம், அறிவார்ந்த செயல்
புரட்டாசி  கால்நடைகள் அபிவிருத்தி
ஐப்பசி  நோய் நீங்குதல்
கார்த்திகை  புத்திரபாக்கியம், சகல வளம்.
மார்கழி  ஆரோக்கியம் அதிகரிப்பு.
தை  எடுத்த செயல்களில் வெற்றி.
மாசி  துன்பம் நீங்குதல்.
பங்குனி  ஆன்மிக நாட்டம், தர்மசிந்தனை வளர்தல்.
எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
பொட்டு வைக்கும் முறை
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
எந்த எண்ணெய்க்கு என்ன பலன்?
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்
ஐந்துக்கும் ஒவ்வொரு பலன்
விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.
ஒரு முகம் ஏற்றினால்  நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால்  குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால்  புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால்  செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால்  சகலநன்மையும் உண்டாகும்
எந்த திசை என்ன பலன்:
கிழக்கு  துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு  கடன், தோஷம் நீங்கும்
வடக்கு  திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
இவர்களுக்குரிய எண்ணெய்
விநாயகர்- தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி  பசுநெய்
குலதெய்வம்  வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர்  நல்லெண்ணெய்
அம்மன்  விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த ஐந்து கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்- நல்லெண்ணெய்.