உலகில் கலப்படம் இல்லாத ஒரே உணவு தாய்ப்பால், கு
ழந்தை உருவானவுடன் பால் சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யும் குழந்தை பிறந்த
மறுநிமிடம் பால் வெளிவரும். முதலில் வரும் பால் அனைத்து சத்துக்களையும் கொண்டு
இருக்கும் சீம்பால் ஆகும்,
அதை கண்டிப்பாக குழந்தைக்கு தர வேண்டும். பாலில் சரியான
விகிதத்தில் நீர் கலந்து இருப்பதால் ஆறுமாதம் வரை குடிக்க தண்ணீர் தர கூடாது, தேவையும் இல்லை.
அம்மாக்கு உணவு முறை: குழந்தை பிறந்ததும் அது சாப்பிடகூடாது, இது சாபிடாதே என்று கட்டுப்பாடுகள் இருக்கும் , ஆனால் உண்மையில்
அதெல்லாம் அந்த காலத்தில் மட்டுமே சாத்தியம். இப்போது நாம் சாதாரணமாக உண்ணும்
உணவுகள் சாபிடலாம். உங்களுக்கு எது முதலயே ஆகாதோ அதை விட்டு விடுங்கள்.
பால், ரொட்டி, பிஞ்சு கத்திரி, அவரை, புடலங்கை போன்றவற்றை பாசி பருப்புடன் சேர்த்து கூட்டு செய்யலாம். முருங்கை
கீரை மிக மிக நல்லது. பால் சுறா என்னும் கருவாடு, மீன் போன்றவைகளும்
பூண்டு அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
பால் நமக்கு சுரக்கவில்லை, குழந்தைக்கு பத்தலை
என்பதுஎல்லாம் நம் கற்பனை. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஆறு முறை பாப்பா சிறுநீர்
கழித்தால், அது தேவையான பால் எடுத்து கொள்கிறது என்று அர்த்தம். குழந்தையை சும்மாவாவது
மார்புகளை சப்ப அனுமதிக்க வேண்டும், ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு
நேரத்தில் உங்கள் வெறும் உடம்பின் மேல் குழந்தையை படுக்க வைத்து அதன் உடல்
முழுதும் வருடி கொடுக்கவும், நீங்கள் சொல்வதை உங்கள் குழந்தை புரிந்து
கொள்ளும்.
குழந்தைக்கு பால் கொடுக்க சோம்பேறித்தனம் படகூடாது, அது என்ன மீறீ போனால் ஒரு இரண்டு வருடம் குடிக்கும் அதற்குள் இரவு தூக்கம் அது
இது என்று காரணம் எதுவும் வேண்டாம், நாம் தருவது தாய்ப்பால் மட்டும்
அல்ல அதன் எதிர்கால வாழ்க்கை என்று நினைவில் கொள்ளுங்கள். வேலைக்கு போகும்
அம்மாக்கள் தாய்ப்பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து குளிர்சாதனபெட்டியில் வைத்து
தேவைப்படும் போது அறையின் தட்பவெப்பத்திற்கு வந்தவுடன் சங்கில் புகட்டலாம், குறைந்த பட்சம் இரண்டு வருடம் பால் கொடுங்கள்.. தவறில்லை. நீங்களும் சரியான
உள்ளாடை போட்டால் மார்பு சரிவதை தடுக்கலாம்.
சங்கில் புகட்டும் போது மடியில் போட்டு ஊற்றக்கூடாது, நாம் பால் கொடுக்கும் நிலையில் வைத்து அதன் தலை நம் முழங்கைமேல் இருக்க
வேண்டும் அப்போதுதான் புரை ஏறாது. ஒவ்வொரு முறை பால் குடித்ததும் தட்டி கொடுத்து
ஏப்பம் வரவைக்கவும். அதேபோல் ஒவ்வொருமுறையும் ஒரு சிறிய கப்பில் தண்ணீர், கொஞ்சம் பஞ்சு வைத்து கொண்டு பால் கொடுக்கும் முன்பும் பிறகும் பஞ்சால்
மார்பு காம்புகளை துடைக்கவும். குழந்தையின் உதட்டையும்துடைக்கவும், இல்லாவிட்டால் அதன் உதடு கறுத்து விடும். பால் கொடுக்கும் போது குழந்தை நுனி
காம்பில் குடிக்க கூடாது,
படத்தில் உள்ளது போல் அதன் வாய் கொள்ளும் வரை நம் மார்புகள்
இருக்க வேண்டும்.
இது ஒரு மிக பெரிய அனுபவம், பால் கொடுத்த அனைத்து
அம்மாக்களும் உணர்ந்த அனுபவம், நமக்கும் குழந்தைக்கும் மட்டுமே உண்டான
பந்தம், அதை அனுபவித்து ரசித்து செய்யுங்கள்.
4 பின்னூட்டங்கள் ஓகஸ்ட் 4, 2009
ஒரு அம்மாவின் குறிப்புகள் – 5
குழந்தைகளுக்கான உணவு வகைகளை புதுகைத்தென்றல் மற்றும் விஜி
முன்னவே பதிவிட்டு உள்ளனர். அந்த பதிவுகளையும் பார்வையிட்டு, பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். தன் குழந்தைகளை வளர்க்க ஒவ்வொரு தாயும் எத்தனை
பாடுபடுகிறார்கள் என்பது இங்கிருக்கும் பதிவுகளை படிக்கும் போது தெரிகிறது. :)
எனக்கு தெரிந்த சில உணவு செய்முறைகளை பதிவிடுகிறேன். அதற்கு
முன் சுயபுராணம். :)
நவீனுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும் மிகவும்
சிரமப்பட்டேன் எனலாம். குறைந்தபட்சம் 2 மணி நேரத்திலிருந்து, 3 நேரம் எடுத்துக்கொள்வான், வாயில் எப்படியும் 2, 3 உருண்டுகளை இந்த பக்கமும் அந்த பக்கமும் அடக்கி வைத்துக்கொண்டு உள்ளே
முழுங்காமல் வைத்திருப்பான். எனக்கு பல நேரங்களில் பொறுமை இழந்து போகும், ஆனாலும் நீயா நானா என்று பார்த்துவிடுவோமடா என்று முழுவதுமாக ஊட்டி
முடித்துவிட்டு தான் விடுவேன். பொறுமையுடன் இருக்கவேண்டும் என்பதால், நான் முதலில் சாப்பிட்டு விடுவேன், இல்லையேல் எனக்கு ஏற்படும் பசியில்
பொறுமை இழுந்து விட்டால் என்ன செய்வது.?
அடுத்து என் அண்ணன் மகன் நிவேதன், இவனின் அம்மா இவன் 1.5 வயதாகும் போது இறந்து போனார்கள். அவனுக்கு பழக்கமே இல்லாத நான் என்னுடன் அவனை
அழைத்து வரும்படியாக ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. யாரைப்பற்றியும்
எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாமல் அழைத்தும் வந்து விட்டேன். அவனுக்கு அப்போது
பேச்சும் வரவில்லை. எப்போதும் அம்மாவை தேடி அல்லது காரணமேயின்றி அழுதுக்கொண்டே
இருப்பான்,
அவனுக்கு புதிய, தெரியாத சூழலில் அவனை அழைத்து வந்து
விட்டதால் அவன் மட்டும் இல்லை நானும் உடன் சேர்ந்து கஷ்டப்பட்டேன். இவன் நவீனுக்கு
எதிர்மறை, எவ்வளவு எளிதாக சாப்பாடு தொல்லை இல்லாமல் நவீனை வளர்த்தேனோ அதற்கு மாறாக
ரொம்பவும் சிரமப்பட்டேன். காரணம், இவனுக்கு எந்த உணவும் சட்டென்று
ஒற்றுக்கொள்ளாது. ஒரு உருண்டை அதிகமாகிவிட்டால் கூட சாப்பிட்ட அத்தனையும் அப்படியே
வாந்தி எடுத்துவிடுவான். ரொம்பவும் உடல் மெலிந்து, எடை குறைந்த குழந்தையாக
இருந்தான்.
நவீன் அப்படி இல்லை. அதனால் நவீனை போலவே அவனையும்
சக்தியுடையவனாக மாற்ற வேண்டும் என்று இரவும் பகலும் நிவேதனை மட்டுமே கவனிக்க
ஆரம்பித்தேன். நிவேதனுக்கு சர்க்கரை, சாப்பாடு, காய்கறி என்று எல்லாமே ஒரு அளவில் தான் இருக்க வேண்டும், டாக்டர் கலோரி கணக்கிட்டு பட்டியில் இட்டு கொடுத்துவிட்டார்கள். ஒரு நாளைக்கு
இவ்வளவு பால், இவ்வளவு சர்க்கரை என்றால் அவ்வளவு தான் உள்ளே செல்ல வேண்டும், அதிகபடியாக சென்றால் உடனே அவன் உடம்பு பாதிக்கப்படும். அதனால் மிக மிக கவனமாக
கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதில் அவன் பக்கமே திரும்பி படுக்க சொல்லுவான்.
அவனுக்காக இரவில் ஒரே பக்கமாக படுத்து என்னுடைய இடுப்பு, மற்றும் கால் பகுதிகளில் தோல் தடித்து, புள்ளி புள்ளியாகி கறுப்பு நிறம்
படற ஆரம்பித்துவிட்டது. அதை போக போக சரி செய்து கொண்டேன் என்றாலும் குழந்தையை
அம்மா இல்லாமல் வளர்க்க எத்தனை சிரமப்பட்டேன் என்பதை மனதளவில் உடலளவில்
உணர்ந்தேன். சில நேரங்களில் தாங்க முடியாமல் வீட்டு கதவு ஜன்னல் எல்லாவற்றையும்
மூடிவிட்டு அந்த குழந்தையை இறுக்கி கட்டிக்கொண்டு சத்தம் போட்டு ஓ’வென்று அழுவேன். எப்படியோ என்னிடம் இருக்கும் வரை நல்ல முறையில் வளர்த்து
கொடுத்துவிட்டேன். :)
சில உணவுகள் வகைகள்:
1. துவரம் பருப்பை 5-6 பூண்டுகள் போட்டு வேகவைத்து கடைந்து, நெய் 2 ஸ்பூன் விட்டு, சுடசாதத்தை நன்கு பிசைந்து, அல்லது மிக்ஸியில் ஒரு அடி அடித்து
பருப்பை சேர்ந்து பிசைந்து ஊட்டிவிடுவேன். தேவைப்பட்டால் ரசம் மேலோட்டமாக
சேர்த்துக்கொள்வேன்.
2. இட்லி தோசை எப்போதும் போல.. நெய் சர்க்கரை தொட்டு அல்லது பால் விட்டு சர்க்கரை
சேர்த்து மசித்து கொடுப்பேன்.
3. சத்துமாவு கஞ்சி
4. முட்டை
* முட்டையை வெங்காயம் சேர்த்து மிளகு பொடி சேர்த்து ஆம்லெட்,
* கீரையை பொடியாக நறுக்கி சேர்த்து மிளகு பொடி சேர்த்து ஆம்லெட்
* முட்டை வேகவைத்து இரண்டாக வெட்டி, மிளகு போடி தூவி கொடுக்கலாம்.
* முட்டை வேகவைத்து மிளகு சேர்த்து வறுத்துக்கொடுக்கலாம்
* பொட்டுக்கடலை, மிளகு இரண்டையும் மிக்ஸியில் மாவாக்கி, முட்டையுடன் கலந்து ஆம்லெட்
* கோஸ், கேரட், பீன்ஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி லேசாக வதக்கி முட்டையுடன் சேர்த்து
அடித்து ஆம்லெட்.
5. முந்திரி, பாதாம், திராட்சை – இவற்றை நிவேதன் பாக்கெட்டில் தினமும் ஒரு 5-10 போட்டு விடுவேன். காலையில்
போட்டுவிட்டு சொல்லுவேன்,
குட்டி மதியத்துக்குள் சாப்பிடு அப்பத்தான் நவீன் மாதிரி
ஆகலாம். இதில் குறிப்பிட வேண்டியது, என்னுடைய குழந்தையாக இருந்தாலும்
நவீனுக்கு இவற்றை நான் கொடுத்தது இல்லை. நிவேதனுக்கு மட்டுமே கொடுப்பேன். அப்படியே
கொடுத்தாலும் அதன் அளவு குறைவாகவே இருக்கும்.
6. கேக், ஸ்வீட், ஐஸ்கிரீம் – இதுவும் நிவேதனுக்கு முதலிடம். அவன் ஆசைப்படுவானே தவிர்த்து அவனால் நவீன் போல
சாப்பிட முடியாது. இருப்பினும் ஸ்வீட், கேக் எப்படியும் வாரத்தில் 3 முறை கொடுத்துவிடுவேன். ஐஸ்கீரீம் அடிக்கடி இல்லை என்றாலும் மாதத்தில் 2 முறை கொடுப்பேன்.
7. சாக்லெட் – இது அதிகமாக கொடுக்காவிட்டாலும், சளித்தொல்லை வராத அளவு
பார்த்துக்கொடுப்பேன்.
8. காய்கறி : இது ஓரளவு இருவரும் சாப்பிட ஆரம்பித்தவுடன் கோஸ், கேரட், பீட்ரூட், வெண்டக்காய், புடலங்காய், பாவக்காய் இவை அடிக்கடி சேர்ப்பேன். இதை தவிர்த்து வறுக்கும் காய்கரிகள் உருளை, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய் வறுத்து தருவேன்.
9. சுண்டல் – தினம் ஒரு சுண்டல், கடலைபருப்பு, பயத்தம் பருப்பு, கொண்டகடலை, வேர்கடலை, முழுபயறு, காராமணி பயறு, மொச்சை போன்றவை. எல்லாவற்றிலும் மிளகுதூள் சிறிது தூவி கொடுத்தல் நலம்.
10. வத்தல் : சீரகம் அதிகம் சேர்த்து, மிளகாய் குறைத்து மிக்ஸியில் நன்கு
அடித்து, வேகவைத்த அரிசிமாவில் கலந்து, இடியாப்ப அச்சியில் பிழிந்து
காயவைத்துக்கொள்வேன். முள் அச்சுலும் கொஞ்சம் பிழிந்து காயவைத்துக்கொள்வேன்.
சீரகம் அரைத்து போட காரணம் குழந்தைக்கு தொண்டையில் அடைத்துக்கொள்ளாது என்பதால்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் போல சீவி, தேவையான உப்பு சேர்த்து பாதியளவு
வேகவைத்து, வெயிலில் காயவைத்து வைத்துக்கொள்ளுவேன்.
11. முருங்கைகாய் லேசாக உப்பு போட்டு வேகவைத்து, உள்ளிருப்பதை மட்டும்
வழித்து, மிளகு தூவி, பருப்பு சாதம் ஊட்டும் போது உடன் சேர்த்து கொடுத்துவிடுவேன். இது சளிக்கு மிக
சிறந்தது.
அத்தோடு இன்றோடு இங்கிருந்து விடைபெறுகிறேன், தேவைப்பட்டால் திரும்பவும் வந்து எழுத முயற்சி செய்கிறேன். வாய்ப்பளித்த
முல்ஸ் மற்றும் தவறாமல் படித்த எல்லா அம்மாஸ் க்கும் எங்களது நன்றிகள். :)
உணவு முறை 0- 1 வயது வரை
பிறந்த குழந்தைகள் குளியல் முறை மிக முக்கியமானது. எங்கள்
வீட்டில் பிறந்த குழந்தையை குளிக்கவென ஒரு ஆயா வருவார்கள், அவர்களுக்கு வெற்றிலை பாக்கு தரனும், அவர் வந்து குளிக்க ஆரம்பிக்கும்
முன் ஒரு பெரிய சடங்கு நடத்துவர், இப்படி திருப்பி அப்படி திருப்பி
குழந்தைக்கு மயக்கமே வந்திருக்கும். இப்பதான் தெரியுது அதெல்லாம் தேவையே இல்லை.
குழந்தைகளின் உடம்பு மிக மிருதுவானது, அதன் மேல் என்ன அழுக்கு படிய
போகுது.
கவிதா சொன்னது போல் எல்லாம் எடுத்து வைத்து பின் குளிக்க
வைங்க. குளிக்க வைக்கும் முன் எதுவும் சாப்பிட குடுக்க கூடாது. குளித்தவுடன்
மிருதுவாக துடைத்து மெல்லிய உடை அணிய வைக்க வேண்டும். பொட்டு, பவுடர் போன்றவை குறைந்தது 5 மாதங்களுக்கு வேண்டாமே . மை, பொட்டு போன்றவைகளையும் தவிர்க்கலாம். மிக மிருதுவான சருமம் இதனால்
பாதிக்கப்படும். வேங்கை பால் பொட்டு என கிடைக்கும், அது வேண்டுமானால் 5 மாதம் பிறகு வைக்கலாம்.
உங்களுக்கு மை தயாரிக்க தெரிந்தால் நல்லது. வெண்ணை அல்லது
விளக்கு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட மை நல்லது.
இன்றைக்கு உணவு முறைகளை பார்க்கலாம்:
கண்டிப்பாக குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே 6 மாதம் வரை கொடுக்கணும். ( என் இரு பெண்களுக்கு 3 வயது வரை கொடுத்தேன.) பாட்டில் பால் வேண்டவே வேண்டாம்.
6 மாதம்:
ஆப்பிள் தோல் சீவி குக்கரில் வேக வைத்து சிறிது நெய்
சேர்த்து கொடுக்கலாம். முளை கட்டிய சாது மாவு, கோதுமை , ஜவ்வரிசி, ராகி கூழ் போன்றவை குடுக்க வேண்டும். முக்கியமா கவனிக்க வேண்டியது ஒரு புது
உணவு குடுத்தால் குறைந்த பட்சம் நான்கு நாட்கள் வேறு எந்த புது உணவும் அறிமுக
படுத்த கூடாது. அப்பதான் அந்த உணவால் எதாவது அலர்ஜி ஆகிறதா என்று நாம் அறிய
முடியும். முதல் நாள் மிக கொஞ்சம் அடுத்த நாள் அளவு கூட்டி தர வேண்டும்.
7, 8 மாதங்கள்:
ஒரு வேளை கூழ், ஒரு வேளை பருப்பு சதம், பால் சாதம் ஆப்பிள், வேகவைத்து மசிக்கப்பட்ட காரட், உருளை கிழங்கு, ரொட்டி பால் சேர்த்து,
உப்பு பிஸ்கட் ஊற
வைத்து கொடுங்க. வெறும் பருப்பு சாதமா குடுத்து குழந்தையை
கொடுமை செய்யாமல், அதற்கென தனியாக சமைத்து கொடுங்கள். பருப்புடன் , காரட் , கீரை, ஒரு வெங்காயம், சிறிய தக்காளி துண்டு எல்லாம் குக்கரில் குழைய வேக வைத்து கொடுங்கள்.
பசும்பால் அறிமுகபடுத்துங்கள்.
9. ,10 மாதம்:
இப்போது, இட்லி, தோசை, சப்பாத்தி, முட்டை, போன்றவைகளை தரலாம்.
11, 12 மாதங்கள் :
நம் வீட்டு நார்மல் சாப்பாட்டு குழந்தைக்கு
பழக்கபடுத்துங்கள்.
எக்காரணம் கொண்டும் மிக்ஸ்யில் அடித்து கொடுக்காதீங்க.
அப்பறம் சாப்படவே பழகாது. குறைவாக இருந்தாலும் பார்க்கும் போதே சாப்பிட துண்டும்
வகையிலும், சத்துள்ள தாகவும் கொடுங்கள். முக்கியமா குழந்தைகள் சாப்பிட ஒரே தட்டு, டம்ளர் வைத்து கொள்ளுங்கள். அதை அடிக்கடி சுட்டு தண்ணீரில் போட்டு கொதிக்கவிட
வேண்டும். காரம், புளி போன்றவைகளை கொஞ்சம் குறைத்து கொடுங்கள். குழந்தை அதிகம் சாப்பிட வில்லை
என்று கவலை பட்டு ஒன்றும் போவதில்லை. உணவு வகைகளை மாற்றி, அடிக்கடி கொடுங்கள்.
உணவை கொடுக்கும் நேரம் ரொம்ப முக்கியம். உதாரணமாக் இரண்டு
வேளை திட உணவு அதிகம் கொடுத்தால் அதற்கு ஜீரணம் ஆகாது, பதிலாக இந்த அட்டவணையை கடைபிடித்து பாருங்கள்.
7 மணிக்கு ஒரு குழந்தை எழுந்தால்:-எழுந்தவுடன் பசும்பால் அரை டம்ளர்,
8 மணி – குளிக்க வைக்கலாம். இந்த பழக்கமும், toilet பழக்கமும் பினனால் உங்க
குட்டி பள்ளி செல்லும் போது பயன்படும்.
8.30 – காலை உணவு – திட உணவாக இருக்கட்டும்
10.30 – தினம் ஒரு ஜூஸ் அல்லது சூப் கொடுங்கள், அல்லது ஒரு பழம்.
12 – திட உணவு
4 மணிவரை எதுவும் தேவை இல்லை. அப்பறம் பால் கொடுங்கள், கூட இரண்டு பிஸ்கட் அல்லது ஒரு ரொட்டி துண்டு.
7.30 மணிக்கு முழு திட உணவு கொட்டுங்கள்.
9 மணி மீண்டும் பால். இதற்க்கு இடையில் தாய்ப்பால், கணக்கே இல்லை.
இப்ப வயிறு நிறைந்து இருக்கும், குழந்தை நடுவில் எழுது கொள்ளாது. தேவை இல்லாமல் அதற்க்கு நடு இரவில் பால்
கொடுத்துஎல்லாம் பழக்காதீர்கள். 8 மாதம் பிறகு வளர்ந்த குழந்தையாக
நினைத்தால் எல்லா பழக்கமும் சொல்லி தர முடியும்.
இதெல்லாம் என் சொந்த அனுபவம், என் குழந்தைகள் நடு
இரவில் அழுததே இல்லை. காரணம் வயிறு நிறைந்த உணவு நல்ல தூக்கம் கொடுக்கும் தானே?
டிப்ஸ்: அம்மாகளுக்கு பால் கட்டி இருந்தால், ஒரு பாத்திரத்தில் உங்களால் பொறுத்து கொள்ள கூடிய அளவு சுடுதண்ணீரும், இன்னொரு பாத்திரத்தில் ஐஸ் தண்ணீரும் வைத்து கொள்ளுங்கள். இரண்டிலும் ஒரு
சின்ன டவல் போட்டு இரு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி துணியை தண்ணீருடன் எடுத்து
பத்து போட்டது போல் போடுங்கள். தினமும் இரவில் தூங்குவதற்கு முன்னும், காலையில் குளிக்கும் போதும் செய்தல், கட்டிய பால் தானாகவே வெளியேறும்.
பிறகுதான் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
அம்மாக்களுக்கு ஒரு அம்மாவின் குறிப்புகள்….
அம்மாவாக ஒரு சின்ன அறிமுகம் செய்துக்குறேன்..! எனக்கு ஒரே
மகன் , பெயர் நவீன். அவனை எந்த /யார் உதவியும் இன்றி தனியாக வளர்த்தேன் என்பது என்
வாழ்க்கையின் சாதனையாகவே நினைக்கிறேன். மூன்று மாதங்கள் வரை ஆயா துணை இருந்தாலும்
அவரின் வயது காரணமாக அவரால் ரொம்பவும் குழந்தையை கவனித்து க்கொள்ள முடியாது. நானே
அவர்களுக்கு ஒரு குழந்தை என்பதால் என்னை கவனிப்பதில் அவரின் கவனம் இருந்தது.
ஆயாவின் நேரடி கவனிப்பில் அந்த மூன்று மாதங்கள் இருக்கும் போதே எப்படி எல்லாம்
குழந்தையை வைத்துக்கொள்ள வேண்டும், என்னுடைய & குழந்தையின் உணவு பழக்கம், குளிக்க ஊற்றுதல், குறிப்பாக தலைக்கு ஊற்றுதல், என் மற்றும் குழந்தையின் தூக்கம், தாய்ப்பால் போன்ற நிறைய குறிப்புகளை என்னில் பதியவைத்துக்கொண்டேன். பின்பு
எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு தேவைப்படும் போது கடிதம் எழுதி ஆயாவிடம்
கேட்டுக்கொள்வேன். அப்போதும் அவர் எனக்கு கொடுக்கும் குறிப்புகள் உணவும் , தூக்கம் சம்பந்தமாகவே இருக்கும்.
ஆயாவின் ஒரு சின்ன அறிவுரையோடு ஆரம்பிக்கிறேன். “உணவே மருந்து !! எந்த அளவு நீயும் குழந்தையும் ஒழுங்கான உணவு பழக்கங்களை
கடைப்பிடித்து சாப்பிட்டு வருகிறீர்களோ.. .அந்த அளவு நீங்கள் டாக்டருக்கு பணம்
கொடுக்க வேண்டாம், டாக்டருக்கு கொடுக்கும் பணத்தை உணவாக மாற்று !! “
இந்த வரிகள் இப்போதும் எனக்குள் உள்ளது, சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு எல்லாம் எல்லாம் என்னையும் சரி நவீனையும் சரி
டாக்டரிடம் போகாமல் இருக்க தேவையானவற்றை வீட்டிலே செய்துக் கொள்ள பழகிக்கொண்டேன்.
உடல் பிரச்சனைகள் குறிப்பாக நவீனுக்கு வராமல் பார்த்துக்கொள்ள ரொம்பவும் அக்கறை
எடுத்துக்கொள்வேன். அவற்றில் சில
1. சுத்தமான தண்ணீர்
2. விளையாடிவிட்டு வந்தவுடன் கை, கால் கழுவுதல், அல்லது குளித்தல்
3. கொசுக்கடிக்காமல் பார்த்துக்கொள்வேன். இதற்கு ரொம்பவும் சிரமப்பட்டேன் எனலாம்.
4. வேளைக்கு தகுந்த, தேவையான உணவு (நேரம் தவறாமல் எப்படியும் கொடுத்துவிடுவேன், இதற்காக அடுத்தநாள் உணவு என்று எழுதி வைத்து தயார் செய்ய வசதியாக்கி
க்கொள்வேன், நேரத்திற்கு ஒரு லிஸ்ட் எழுதி வைத்துக்கொள்வேன்)
5. உடம்பை கஷ்டப்படுத்தாத ஆடைகள், பொதுவாக மெல்லிய பருத்தி ஆடைகள், தவிர்ப்பது நைலான், நிறைய சிமிக்கி வேலைபாடுகள் உள்ள ஆடைகள், மிகவும் இறுக்கமான ஆடைகள்.
6. சுத்தமான படுக்கை, படுக்கை பொதுவாக குழந்தைகளுக்கு வெள்ளை நிறத்தில் கவர் போட்டு இருக்க வேண்டும், அப்போது தான் பூச்சி,
எறும்பு போன்றவை இருந்தால் தெரியும்.
7. நேரத்திற்கு சரியான தூக்கம்
8. ஆடைகள் துவைக்கும் போது , கிருமி நாசினி (டெட்டால்) யை கலந்து
உலர்த்துவேன். தலையணை உறைகள், பெட் கவர்கள், உள்ளாடைகளை வாரம் ஒருமுறையாவது சுடத்தண்ணீரில் கொதிக்க வைத்து துவைப்பது.
உணவு முறைகள் :-
தாய்ப்பால் :- தாய்ப்பாலை விட சிறந்த உணவு இல்லை.
குழந்தைக்கு தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை அந்த குழந்தையின் வாழ்நாள் முழுதும்
கொடுப்பதும், நல்ல திடமான தேக ஆரோக்கியத்துடன் இருக்க இது தான் அடிக்கல் எனலாம்.
குறைந்தபட்சம் 1 வருடம் அதிகபட்சம் அவரவரின் விருப்பத்தை பொருத்தது. இப்போது எல்லோரும்
வேலைக்கு செல்வதால் இது எந்த அளவு சாத்தியப்படுகிறது என்று தெரியவில்லை. மேலும்
அறிய
தாய்ப்பால் கொடுக்கும் தாயிக்கான சிறந்த உணவுகள் :-
1. முருங்கைக்கீரை – இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில்
சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வர வாய்ப்புகள் அதிகம்.
2. மீன் , பால் சுறாப்புட்டு மிகச்சிறந்த உணவு, இதுவும், செய்த அன்று சாப்பிடுவது நல்லது, வைத்திருந்து சாப்பிடக்கூடாது
குறிப்பாக பால் கொடுக்கும் பெண்கள்.
3. கீரை வகைகள் அத்தனையும்.
4. பசும்பால் குறைந்தபட்சம் 500 மிலி குடிக்கவேண்டும். (கண்டிப்பாக.)
குழந்தைகளுக்கான உணவு:-
இது 7 மாதங்களில் இருந்து ஆரம்பிக்கலாம்.
இருப்பினும் உங்களின் குழந்தை டாக்டரிடம் கலந்து ஆலோசித்து பிறகு கொடுங்கள்.
நவீனுக்கு டின் ஃபுட் எதுவுமே கொடுக்கவில்லை. கொடுக்கக்கூடாது என்று
தவிர்த்துவிட்டேன் எனலாம். அதற்கு பதிலாக வீட்டிலேயே தயார் சத்துமாவு கஞ்சி
கொடுப்பேன்.
சத்துமாவு கஞ்சி :-
பச்சரசி : 1/4 கிகி
சம்பா கோதுமை : 1/4 கிகி
கேழ்வரகு : 1/4 கிகி
சோளம் : 100 கி
பார்லி : 50 கி
கம்பு : 50 கி
சுக்கு : சுண்டு விரல் அளவு 3
ஏலக்காய் : 5
பொட்டுகடலை : 200 *
முந்திரி : 200 *
பாதாம் : 200 *
இதில் * இட்டதை வீட்டில் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள், மீதமுள்ளதை நன்கு கழுவி சுத்தம் செய்து, காயவைத்து மிஷினில், அரிசி அரைத்த பிறகு இதை கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள், பிறகு வீட்டில் அரைத்து வைத்ததை இதனுடன் கலந்து , வயதிற்கு தகுந்தார் போன்று தேவையான அளவு எடுத்து கஞ்சி காய்த்து, பால் , சர்க்கரையுடன் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
தினமும் குழந்தையின் உணவு பட்டியலில் சேர்க்கவேண்டியவை
கீரை :- தினமும் ஒரு கீரை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்,
முட்டை :- தினம் ஒரு வித சுவையில் செய்து கொடுங்கள்
சுண்டல் : ஏதாவது ஒரு சுண்டல் தினமும் ஒரு வேளை இதை
கொடுக்கலாம்
பசும் பால் : – ஏதோ ஒரு வகையில் இதுவும் உள்ளே
செல்ல வேண்டும்
சீரக தண்ணீர் : வெறும் தண்ணீர் கொடுப்பதற்கு பதில் சீரகம், காய்ந்த திராட்சை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து (திராட்சையை நசுக்கி
விடவும்) குழந்தைகளுக்கு இதையே கொடுத்துவந்தால், உணவு செரிமானம்
சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.
பிஸ்கட் : க்ரீம் இல்லாத பிஸ்கட் கொடுக்
கலாம் (க்ரீம்
இருப்பவற்றை குழந்தைகளுக்கு தயவு செய்து கொடுத்து பழக்கவேண்டாம்)
வத்தல் : கடையில் வாங்குவதாக இருந்தால் கலர் வத்தலாக
இல்லாமல், வெள்ளையாக இருப்பதை மட்டும் வாங்கி பொரித்து கொடுக்கலாம் வீட்டில் செய்தால்
குழந்தை சாப்பிட வசதியாக அதிக பச்சைமிளகாய் சேர்க்காமல் செய்து வைத்து
கொடுக்கலாம்.
We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply Now!,For more info Email: healthc976@gmail.com , Call or whatsapp +91 9945317569
பதிலளிநீக்கு