வெயில் காலம் ஆரம்பித்தாலே அனைவருக்கும் மனதில் ஒருவித பயமானது ஏற்படும். ஏனெனில் மற்ற காலங்களைத் தவிர, கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தாங்கிக் கொள்ளவே முடியாது. குறிப்பாக வெயில் காலத்தில் காதாரணமாகவே உடல் வெப்பமானது விரைவில் அதிகரித்துவிடும். ஆகவே அப்போது சாப்பிடும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சில உணவுப் பொருட்களும் உடலில் வெப்பத்தை அதிகரித்துவிடும். இதனால் எப்போதும் மனதில் ஒருவித எரிச்சல், கவனக்குறைவு, தூக்கமின்மை, வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.
அதிலும் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர வெயில் அல்லது கத்திரி வெயிலின் போது வீசும் வெயிலின் தாக்கத்தை தாங்கவே முடியாது. எனவே இந்த மாதத்தில் உணவுகளில் கட்டுப்பாட்டுடனும், கவனமாகவும் இருந்தால், கோடை வெயிலில் இருந்து தப்பிக்கலாம். மேலும் கோடையில் நிறைய தண்ணீர் மற்றும் பழங்களை சாப்பிட்டு, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதோடு, ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு உடல் வெப்பமானது அதிகம் இருக்கும். அத்தகையவர்கள் ஒருசில உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
அத்தகையவர்களுக்காகவும், உடல் வெப்பம் அதிகமாகாமல் இருக்கவும், கோடையில் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி நன்மை பெறுங்கள்.
கார உணவுகள்
*************
கார உணவுகளை கோடையில் மட்டும் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகளை சாப்பிட்டால், உடல் வெப்பமானது அதிகரிக்கும். அதிலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் மசாலாப் பொருட்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.
சப்பாத்தி
********
கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் இந்த நேரத்தில் உடல் வெப்பமானது அதிகரிக்கும். எனவே பகல் நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக சாதத்தை எடுத்துக் கொள்வது நல்லது.
பால் பொருட்கள்
***************
அன்றாடம் சாப்பிடும் பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவையும் உடல் வெப்பத்தை அதிரிக்கும். எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது.
சிக்கன், நண்டு, இறால்
*********************
அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அத்தகையவர்கள் கோடையில் சிக்கன், நண்டு, இறால் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சிலசமயங்களில் சூட்டை கிளப்பி வயிற்றுப் பிரச்சனையான வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலில் இருந்து நீரை வெளியேற்றிவிடும். எனவே இதனை தவிர்ப்பதே நலம்.
ஜங்க் உணவுகள்
***************
பர்கர், பிட்சா, பிரெஞ்ச் ப்ரைஸ் போன்றவை செரிமான மண்டலத்திற்கு கஷ்டத்தைக் கொடுப்பதோடு, சில நேரங்களில் அவை ஃபுட் பாய்ஸனையும் ஏற்படுத்தும். மேலும் இத்தகைய உணவுகள் உடலுக்கு தீமையையே கொடுக்கக்கூடியது. இத்தகைய உணவுகளை அனைத்து காலங்களிலும் தவிர்ப்பதே உடலுக்கு சிறந்தது.
காபி
****
காபியும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. எனவே இதனை முடிந்த வரையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்தது.
வறுத்த உணவுகள்
*****************
எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும், உடல் வெப்பம் அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையும் உண்டாகும்.
உலர் பழங்கள்
*************
உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை தான். அதே சமயம் அதில் உடலை வெப்பப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிட வேண்டும்.
மாம்பழம்
*********
கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழம் சாப்பிட்டால், உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும். இதுவும் அளவுக்கு அதிகமானால், அவை உடல் வெப்பத்தை கிளப்பிவிட்டு, பருக்களையும் உண்டாக்கும். எனவே இந்த பழத்தை அளவாக சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள், இதனை தவிர்ப்பதே நல்லது.
ஐஸ் க்ரீம் மற்றும் குளிர் பானங்கள்
************************** *******
குளிர்ச்சியாக இருக்கும் ஐஸ் க்ரீம் மற்றும் குளிர் பானங்கள் இரண்டுமே உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது. இவற்றை சாப்பிட்டால், வாய்க்கு மட்டுமே குளிர்ச்சியாக இருக்குமே தவிர, வயிற்றிற்கு அவை சென்றால், வெப்பத்தை தான் அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக