வியாழன், 27 செப்டம்பர், 2012

தாவரத் தங்கம் - கேரட்

ஒரு குறிப்பிட்ட காய்கறி வகையை `தாவரத் தங்கம்’ என்று அழைக்கிறார்கள். அது எது தெரியுமா? `கேரட்’தான். 

நம் மேனிக்கு தங்கம் போன்ற பளபளப்பைத் தருவதால்தான் கேரட்டுக்கு இப்பெயர். கேரட்டில் உள்ள `பீட்டா கரோட்டின்’, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் சிறப்புத் தன்மையையும் கொண்டிருக்கிறது. மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம், இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கூறுகள், புற்றுநோய்க்கு எதிரியாகவும் செயல்படுகின்றன.
இந்த பீட்டா கரோட்டினானது, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

நீண்டகாலமாக `அல்சர்’ உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட்டை நன்கு பிழிந்து சாறு எடுத்து வாரம் மூன்று தடவை வீதம் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் குணமடையும். மறுபடியும் அது போன்ற பாதிப்புகள் ஏற்படாமலும் தடுத்துவிடும்.

சிலருக்கு வாயில் எப்போதும் துர்நாற்றம் இருந்துகொண்டே இருக்கும். எத்தனை தடவை பல் துலக்கினாலும், வாய் கொப்புளித்தாலும் அந்தத் துர்நாற்றம் போகாது. அதற்குக் காரணம் வாயோ, பற்களோ அல்ல. வயிற்றில் இருக்கும் கோளாறுதான். வயிற்றுக் குறைபாட்டைச் சரிசெய்தால் வாய் துர்நாற்றம் அகன்றுவிடும். அதற்கு, வாரம் ஐந்து நாட்கள் மட்டும் கேரட் சாறை சர்க்கரை, உப்பு சேர்க்காமல் அருந்திவர வேண்டும். அப்புறம், வாய் துர்நாற்றம் போயே போய்விடும்.

வாரத்துக்கு இரண்டு நாட்களாவது கேரட்டை சமையலில் பயன்படுத்துவது உடம்புக்கு நல்லது. காரணம், கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை அளிப்பதுடன், செரிமானத்தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது.

கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம் என்பது இதன் சிறப்பு. பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி கேரட்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் அந்தக் கறை மறைந்துவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக