வெள்ளி, 10 ஜனவரி, 2014

ஜில்லா திரை விமர்சனம்: விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜயைப் பிடிக்காதவர்களுக்கும் இந்தப்படம் பிடிக்கும்...

 
   மதுரை ஜில்லாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரபல தாதா 'சிவன்' மோகன்லால். கிரானைட் குவாரியிலிருந்து சாரயக்கடை வரை அவர் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.மதுரையே அவர் விரலசைவுக்கு கட்டுப்படுகிறது. இளம்வயது மோகன்லாலின் டிரைவரின் மகன்தான் விஜய். முன்னாள் தாதாவான கவிஞர் ஜெயபாலனை மோகன்லால் கொன்றுவிட, அவரை பழிவாங்க ஜெயபாலனின் வாரிசுகள் முயல்கிறார்கள். அந்த ஆபத்திலிருந்து மோகன்லாலின் மனைவியான பூர்ணிமாவை சிறுவனாக இருக்கும் விஜய் காப்பாற்றுகிறார். அதில் விஜயின் அப்பா போலிஸ்காரரால் சுடப்பட்டு இறந்துவிடுகிறார்.

தன் மனைவியின் உயிரைக்கபாற்றிய விஜயை தத்தெடுத்து தன் மகனைப்போல வளர்க்கிறார் மோகன்லால். அவரது ஒவ்வொரு கட்டளையையும் கச்சிதமாக முடிக்கும் செயல்வீரனாக 'ஜில்லா'வாக மதுரையையே கலக்குகிறார் விஜய். தன் வளர்ப்புத் தந்தையான மோகன்லால் மீது சிறு துரும்பு பட்டால்கூட கொதித்தெழும் ஆக்ரோஷ இளைஞனாக இருக்கிறார். 

ஒரு கட்டத்தில் புதிதாக வந்த கமிசனரால் மோகன்லாலுக்கு தொல்லைகள் வர, தனக்கு கட்டுப்படும் ஓர் ஆளை கமிசனராக நியமித்தால் நல்லது என்று மோகன்லால் முடிவெடுக்கிறார். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி விஜயை மதுரைக்கு அஸிஸ்டண்ட்  கமிசனராக நியமிக்கிறார். தன் தந்தை ஒரு போலிஸ்காரரால் கொல்லப்பட்டதால் காக்கி உடையையே வெறுக்கும் விஜய், தன் அப்பாவைவிட அதிகமாக நேசிக்கும் மோகன்லாலுக்காக அதே காக்கியை உடுத்துகிறார்.

இதன் பிறகுதான் சூடுபிடிக்கிறது படம். இதுவரை மோகன்லால் சொல்லும் அனைத்து கெட்ட காரியங்களையும் தட்டாமல் செய்த விஜய், ஒருகட்டத்தில் தந்தையையே எதிர்க்கும் நிலைமைக்கு சில சம்பவங்கள் அவரை மாற்றுகிறது. இதுவரை செய்த அனைத்து கெட்ட விசயங்களையும் மறந்துவிட்டு நல்லவனாக மாற தன் தந்தையை நிர்பந்திக்கிறார் விஜய்.ஆனால் தான் அதே சிவனாகவேத்தான் இருப்பேன் என்று  மறுத்துவிடுகிறார் மோகன்லால். இதுவரை நகமும் சதையுமாக இருந்த சக்தியும் (விஜய்) , சிவனும் (மோகன்லால்) பின்னர் கீரியும் பாம்புமாக மாறிவிடுகிறார்கள்மோகன்லாலின் சாம்ராஜ்யத்தையே தரைமட்டமாக்கி அழிக்கிறார் விஜய்.அப்பாவைத் திருத்த போராடும் மகன்,வளர்ப்பு மகனை தீர்த்துக்கட்ட துடிக்கும் அப்பா என இருவருக்கும் நடக்கும் யுத்தத்தில் கடைசியில் என்ன நடத்தது என்பதே கிளைமாக்ஸ். 

விஜய்க்கு ஜில்லா மிகப்பெரிய ஹிட். எந்த சந்தேகமும் இல்லை. சண்டைக்காட்சிகள், நடனசைவுகள், வசன உச்சரிப்புகள் எல்லாவற்றிலும் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. ஈடுபாட்டுடன் செய்திருப்பது நன்றாகத் தெரிகிறது. ஒரு இடத்தில் கூட 'ஓவர் பில்டப்' காட்சிகள் வராமல் பார்த்துக்கொண்டது, ஒருவேளை தலைவா தந்த அடியாக இருக்கலாம். விஜயின் அறிமுகக்காட்சியில், அவர் ரவுடிகளை துவம்சம் செய்துவிட்டு அசால்டாக வர, அங்கிருக்கும் ஒரு பெருசு,"உன்னைப்போல ஊருக்கு ஒரு நல்லவன் இருந்தா தப்பே நடக்காது" என்று ஏற்றிவிட, " ஊருக்கு புதுசா.. தப்பு நடக்கக்கூடாதுன்னு அடிக்கல...தப்பு நடக்கணும். ஆனா அதை நாம மட்டும்தான் பண்ணனும் " என கூலாக விஜய் சொல்லும்போது உண்மையிலேயே எழுந்து விசிலடிக்க தோன்றுகிறது.

படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொருவர் பரோட்டோ சூரி. இந்தப்படத்தில் காமெடி செமையாக ஒர்க் அவுட் ஆயிருக்கிறதுவடிவேல் விட்டுச்சென்ற வெற்றிடத்தை ஒருவேளை இவர் நிரப்பக்கூடும். விஜய்க்கு காக்கி மேல் உள்ள வெறுப்பால் காக்கி உடை போட்ட நபரைக்கண்டால்  அங்கேயே அவர் சட்னிதான். காஜலை விஜய் முதன்முதலில் பார்த்துவுடன் காதலில் விழுந்து, பிற்பாடு அவர் போலிஸ் என்று தெரிந்து ஜகா வாங்குவதாகட்டும், பிறகு போலிசாகி அவரையே லவ்வுதாக இருக்கட்டும், தன் பள்ளி நண்பனான சூரி போலிசாகி நேராக விஜயிடம் காண்பிக்க வந்து சின்னாபின்னமாவதாக இருக்கட்டும், பிறகு விஜயிடமே கான்ஸ்டபிளாக சேர்ந்து விஜய்-காஜல்-சூரி மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டியாகட்டும்... எல்லாமே கலகல பட்டாசு.


மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மம்முட்டி தமிழில் நடித்த பெரும்பாலான படங்கள் செம ஹிட்டாக, மோகன்லாலுக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் கைகூடவே இல்லை. உன்னைப்போல் ஒருவனைத் தவிர்த்து அவர் எதிர்பார்த்து நடித்த அனைத்துப் படங்களும் பெரும் தோல்வியைத் தழுவின. அந்தக்குறையை இந்தப்படம் போக்கிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மதுரை சிவனாக மோகன்லால் கனகச்சிதம். கண்களில் வெடிக்கும் கோபத்துடன் கர்ஜிக்கும் அவரின் தோரணை முத்துப்பாண்டியையே மிஞ்சிவிடுகிறது. முதல் பாடலில் விஜய்யுடன் சேர்ந்து போடும் ஆட்டமும், இறுதியில் இருவரும் இணைத்து போடும் சண்டையும் அட்டகாசம். ஒருபுறம் பாசமான அப்பா, மறுபுறம் தன் மகனிடம் தோற்றுப் போய்விடக்கூடாது என்கிற வெறி... பின்னியெடுக்கிறார் மோகன்லால். என்ன... பேசும்போது கொஞ்சம் மலையாள வாடை அடிக்கிறது. அவ்வளவுதான்.

விஜய் படமென்றால் தங்கை செண்டிமெண்ட் இல்லாமலா...? கூடவே தாய் செண்டிமெண்ட் வேறு. தன் வயிற்றில் பிறக்காவிட்டாலும் பூர்ணிமா விஜய் மீது வைத்திருக்கும் பாசம் அழகிய கவிதை.மோகன்லாலில் சொந்த மகனாக மகத். ஒன்றும் பெரியளவில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கடைசியில் பரிதாபமாக இறந்து போகிறார்.மோகன்லாலின் மகளாக வரும் நிவேதா தாமஸ், அண்ணன் -தங்கை செண்டிமெண்ட்க்காக உபயோகப்படுகிறார்.

பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அதிலும், ஜிங்குனமணி.. ,எப்ப மாமா ட்ரீட்.... பாடல்கள் செம குத்து. பின்னணி இசையும் நன்றாக அமைந்திருக்கிறது. இமான் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் .  



படத்தின் நிஜ வில்லன் அமைச்சராக வரும் சம்பத். தன்னிடம் வேலைபார்க்கும் ஒருவர், தனக்கு தெரியாமல் பிசினஸ் டீலிங் செய்ததை கண்டுபிடித்து, துரோகமாக எண்ணி அவரைக் கொல்லும் மோகன்லால், சிறுவயதிலிருந்தே சம்பத் என்ற பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்திருக்கிறாரே. அதை எப்படி கவனிக்காமல் விட்டார்...?   சம்பத்தான் வில்லன் என்கிற ட்விஸ்டை கிளைமாக்ஸ் வரை கொண்டுசென்றிருக்கலாம். விஜயின் தம்பியான மகத்தை கொல்லப்போவதாக போனில் விஜயிடம் பலமுறை தெரிவிக்கிறார் சம்பத். அதை ரெகார்ட் செய்து மோகன்லாலிடமோ அல்லது மகத்திடமோ போட்டுக்காட்டினால் மகத் இறப்பது தவிர்க்கப்பட்டிருக்குமே... ! ஆனால் கிளைமாக்சில் உள்ள ட்விஸ்ட் எதிர்பாராதது.

இப்படி ஒரு சில சந்தேகங்கள் எழுவது கூட சாத்தியமில்லாமல் விறுவிறுவென திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் நேசன். முருகா என்ற சுமாரான படத்தைக் கொடுத்தவர், இளைய தளபதியை வைத்து, அதுவும் தலைவா என்ற மரண மொக்கைக்கு அடுத்து வரும் படம், இரு மாநில சூப்பர் ஸ்டார்கள்.. எப்படி சமாளிக்கப்போகிறார் என்கிற பலரது ஐயத்தை தவிடு பொடியாக்கியிருக்கிறார் இயக்குனர். சிவகாசியையும் போக்கிரியையும் ஒன்றாக பார்த்தது போன்ற உணர்வு. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜயைப் பிடிக்காதவர்களுக்கும் இந்தப்படம் பிடிக்கும்...